நீதியை வலியுறுத்தி ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்

0
96

ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் என்பது உலகம் முழுவதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்கும் நீதிக்குமானது என்று பாதிக்கப்பட்ட உறவுகள் கூறுகின்றனர்.

ஒகஸ்ட் 30 ஆம் நாள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பன்னாட்டு தினத்தின்போது தாயகத்தில் பாரிய போராட்டம் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. பன்னாட்டு அமைப்புக்களிடம் கோரிக்கை மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை சர்வதேச விசாரணை மூலம் வழங்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை உறவுகள் தமது போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளின் முன் பூநகரியை (Pooneryn) சேர்ந்த ஆறுமுகம் செல்லம்மா என்பவரை ஒரு போராட்டத்தில் சந்தித்தேன். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கி இருந்தார். நான் ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி.

இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை (Sri Lanka) இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கடமை. எனவே இலங்கை அரசு எனது பிள்ளையை திருப்பித் தரவேண்டும் என்றார் செல்லம்மா.

காணாமல் போன பிள்ளை என்று அடையாளப்படுத்த விரும்பாத செல்லம்மா எனது பிள்ளையை காணாமல் போன பிள்ளை என்று இலங்கை அரசு சொல்ல முடியாது என்றார்.

பிறகு சில வருடங்களில் அவர் மரணித்த செய்தி அறிந்த போது மனம் அந்தரித்து துடித்தது. அந்த தாயும்தான் பின்யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

அப்படித்தான். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

காலத்துயரம் நிரம்பிய அக்கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை உலுப்புகின்ற செயல். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடாத்தியே வருகின்றனர். உலகிலேயே இவ் அவலம் அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.

கையளிக்கப்பட்ட பிள்ளை காணாமல் போவது எப்படி என்று அவர் கேட்கும் கேள்விக்கு இலங்கை அரசு பதில் அளிக்கவில்லை. இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உயிர்களே காணாமல் போனவர்கள் என்று அரசு கை விரிக்கிறது என்றால் இந்த அரசு மனித உயிர்கள் குறித்தும் தமிழ் இளையர்கள் குறித்தும் என்னவிதமான மனநிலையைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மனித உரிமை குறித்த இந்த மோசமான அணுகுமுறைக்கு உலகம் இணங்கிப் போவதுதான் உலகில் இன்றைய நாள் குறித்த உண்மை நிலையாகும்.

போரின் இறுதியில் சரணடையவப் போவதாக சொல்லி தனது உடைகளை தாயாரிடம் கையளித்துவிட்டுச் சென்றான் எனது நண்பன் கோபிநாத். “அம்மா எனது சேட்டை வையுங்கள். வந்து அதைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும்” என்றானாம். இன்று வரை அவன் சட்டையுடன் காத்திருக்கிறார் அவன் அம்மா.

எனது பிள்ளை எங்கு சென்றான்? எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி. படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு? இத்தகைய தாய்மார்களின் கண்ணீரில் நனையும் ஈழத் தீவு குறித்து இந்த நாளில் இவ் உலகம் என்ன பொறுப்பைச் சொல்லப்போகிறது?

பதினைந்து ஆண்டுகள்

ஒகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம். போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகின்றன. வருடம் தோறும் இந்த தினத்தை நினைவு கொள்கிறோம். போராட்டங்கள் செய்கின்றோம். தலைவர்கள் அறிக்கைகளை விடுகின்றனர்.

எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதுகிறோம். கவிஞர் கவிதைகளை எழுதுகிறோம். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்ன முன்னேற்றம் நடந்தது? அந்த மக்கள் இன்றும் தெருவில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராடிப் போராடியே செத்துக் கொண்டிருப்பதுதான் நடந்தது. ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) இறுதிப் போரில் இராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.

காணாமல் ஆக்குதல்தான் தீர்வா?

அவர்கள் இதைத்தான் எண்ணுகின்றனர் போலும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடுகின்ற தாய் – தந்தையர்களும் மெல்ல மெல்ல காணாமல் ஆகிப் போவார்கள்.

அப்போது கேள்வி எழுப்ப எரும் இருக்க மாட்டார்கள் என்று. இதே விசயத்தைதான் எல்லா இடத்திலும் சிங்கள அரசு பிரயோகிக்கிறது. நாம் நிலத்தின் அதிகாரத்தை கேட்கிறோம்.

அவர்கள் தொடர்ந்து நிலத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது கடலைக் கோருகிறோம். அவர்கள் கடலை காணாமல் ஆக்குகிறார்கள்.

நாம் நமது காட்டை கோருகிறோம் அவர்கள் காட்டை காணமல் ஆக்குகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் காணாமல் ஆக்குவதைத்தான் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

இப்போது நாங்கள் ஆலயத்திற்கு பெரிதாக செல்வதில்லை. அவர்கள் ஆலயங்களை காணாமல் ஆக்கி புத்த விகாரைகளை கட்டுகிறார்கள். நாம் பண்பாட்டு உணர்வு உரிமையை மறந்துவிடுகிறோம். அவர்கள் அதனையும் காணாமல் ஆக்குகிறார்கள்.

இலங்கை அரசுடன் பேசி தீர்வைப் பெறலாம் என முனைகிறோம் ஈழ விடுதலைப் போராட்டத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் இந்த நாளில் ஒட்டுமொத்தமாக காணாமல் போனோர் என்றொரு இனமாக ஈழத் தமிழரையும் நினைவு கூர வேண்டிய நிலை வரும். இதே நிலை தொடர்ந்தால் ஈழம் என்றொரு காணாமல் போன நிலத்தையும் நினைவுகூர வேண்டி வரும்.

காணாமல் போன ஒரு தாயின் வலியை உணர்தலும் அதற்காய் இயங்குதலும்தான் இந்த நிலையை இல்லாமல் செய்யும் முதல் புள்ளியாய் இருக்கும்.

காணாமல் ஆக்குதல் எனும் இனவழிப்பு

இலங்கையின் இனப்பிரச்சினையின் – ஒடுக்குமுறையின் தீவிரத்தை காணாமல் போகச் செய்தல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. முப்பதாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற காணாமல் போகச் செய்தல்கள், ஈழத் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக சந்திக்கும் ஒடுக்குமுறையின் கோரத்தை, இன அழிப்பின் தீவிரத்தை வெகுவாக எடுத்துரைக்கின்றன.

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அவர்கள் காணமால் போகச் செய்யப்பட்டார்கள்? அவர்கள் எங்கிருக்கின்றனர் என்ற கேள்விகளுக்கான பதில்களே ஈழத் தீவின் அமைதிக்கும் நீதிக்கும் அடிப்படையாய் அமைகின்றன.

காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் கொடூரமான இன ஒடுக்குமுறையை இனவழிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. அது மாத்திரமல்ல, இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை தனது சொந்தப் பிரஜைகளாக கருதவில்லை. இன்னொரு நாட்டின் அடிமைகளாக கருதியதினாலேயே இவ்வாறு காணாமல் ஆக்கியிருக்கிறது.

நாம் சிறிலங்கனாக இருந்திருந்தால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கமாட்டோம். சிறிலங்கா அரசும் அப்படிக் கருதியதில்லை. உண்மையும் அதுவல்ல. தமிழ் மக்கள் தமது தாயகத்தை கோரினால் காணாமல் ஆக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான அச்சுறுத்தலையே இதன்மூலம் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கின்றது.

காணாமல் போனோருக்கு அரச அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் சர்வதேச தலையீடுதான் நீதியைப் பெற்றுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இதனை ஆதாரபூர்வமான விடயங்களுடன் சர்வதேச ரீதியாக வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே நீதிக்கான வழிமுறையாகும்.

இதனை வலியுறுத்தும் விதமாய் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு எமது குரலை வலுவாய் வெளிப்படுத்துவோம்.