போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களையும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களையும் தேசிய மக்கள் சக்தி தண்டிக்க முயற்சிக்காது என அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பேரில் போட்டியிடும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை மேற்கோள்காட்டி தென் இலங்கை ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு படுகொலை, ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்படல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கின் முன்னணி பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் மொழி உரிமையை பாதுகாத்தல், புதிய அரசியலமைப்பை ஒன்றை கொண்டு வருதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.