தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பாகவே தமிழ் பொது வேட்பாளர் காணப்படுகின்றார் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்( S. Shritharan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்த தெரிவித்த அவர், “தமிழ் பொது வேட்பாளருக்கு அழிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு இன அழிப்பு நடந்தது என்பதை சுட்டிக்காட்டி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை கூறும் விதமாக இருக்க வேண்டும்.
மேலும் சமஸ்டி அடிப்படையிலான கோரிக்கை பற்றி எந்த ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுகின்றாரோ அவர் தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றே தமிழரசுக்கட்சிக்குள்ளும் பேசப்பட்டுள்ளது.
கடந்த எத்தனையோ வருடகாலமாக நாமும் வாக்களித்து வருகின்றோம் எனினும் இதுவரையில் சாதகமாக எதுவும் கிடைக்கவில்லை.
எம் ஒவ்வொருவருக்குமே போரின் வலி தெரியும், எனவே 4 இலட்சம் வாக்குகள் பொது வேட்பாளருக்கு கிடைத்தாலும் இது எமது பெரிய வெற்றியாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் கூட 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எனவே அவர்களுக்கான ஒரு சர்வதேச ரீதியான நீதி வேண்டும் என்பமை வலியுறுத்தும் ஒரு களமாகவும் பொது வேட்பாளர் காணப்படுகின்றார்.” என குறிப்பிட்டுள்ளார்.