ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவான பின்னரே மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் – மோசடியின் பிரதான குற்றவாளி அர்ஜுன மகேந்திரன் விடுதலை செய்யப்பட்டதாக முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
”அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்த சந்தர்ப்பத்தில், அவர் ஓர் ஊழல்வாதியென நாம் கூறியிருந்தோம்.
ஆனால், அவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் மத்திய வங்கியில் பாரிய ஊழலொன்று இடம்பெற்றது. எவ்வளவு கோடிகள் இதன்மூலம் கொள்ளையடித்தனர் என கணக்கிட முடியாத பாரிய ஊழலாகும்.
குற்றவாளியான அர்ஜுனவுக்கு எதிராக நாம் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானப் பின்னர் அவர் விடுதலையாகிவிட்டார்.
அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளது. இந்த நாட்டின் மக்களின் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துள்ளதால்தான் மக்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர்.” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.