தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை வழிபடச் சென்ற நடிகை நமீதாவிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் இருக்கிறதா என கோயில் நிர்வாகத்தினர் கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இதன்படி, கோயில் பாதுகாப்பிற்காக இந்து மதத்தினர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில், இன்றையதினம் (26-08-2024) காலை தனது கணவருடன் நடிகை நமீதா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மனை வழிபடச் செய்வதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கோயில் அதிகாரி ஒருவர் நமீதாவிடம், “நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா, அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த நடிகை நமீதா,
நானும் எனது கணவரும் பிறப்பிலேயே இந்து எனவும், பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அந்த அதிகாரி, “குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் செல்லுங்கள்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. பின்பு அவரும் குங்குமம் வைத்துக்கொண்டு அம்மனை வழிபட கோயிலுக்குள் சென்றுள்ளார்.
இதனையடுத்து, நடிகை நமீதா கோயிலில் நடந்தது தொடர்பில் காணொளியாக வெளியிட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது. இது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் “பொதுவாக முகக்கவசம் அணிந்து வருவோரிடம் விவரம் கேட்பது நடைமுறை.
அதே போல முகக்கவசம் அணிந்து வந்த நமீதாவிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. அதுதவிர வேறு ஒன்றுமில்லை. அவர் நடிகை என்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியாது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.