கொழும்பில் முகாமிட்டுள்ள இந்திய நாசகாரி போர் கப்பல்: கூட்டு செயற்பாடுகளுக்கு தயாராகும் கடற்படையினர்

0
35

இந்திய கடற்படையின் போர் நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்த விஜயத்தின் மூலம் குறித்த கப்பலின் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கன் டொக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி இந்திய கடற்படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 410 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளதுடன், கேப்டன் சந்தீப் குமார் கப்பலுக்கு தலைமை தாங்குகிறார். மேலும் மேற்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டபிள்யூ.டி.சி.யு.குமாரசிங்க அவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐஎன்எஸ் மும்பை கொழும்பில் தரித்து நிற்கும் காலத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளனர்.

அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.