ரணிலின் மேடையில் ஏறும் தலதா: சிறிக்கொத்தாவில் முக்கிய கூட்டத்துக்கும் அழைப்பு

0
49

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்ப்பில் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலதா அத்துகோரள, கடந்த நாடாளுமன்ற அமர்வில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன், விரைவில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டு கிடப்பதை பார்க்க கவலையாக உள்ளதாக கூறியிருந்த தலதா அத்துகோரள, கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்கவே 1994ஆம் ஆண்டு முதல் கட்சியை பாதுகாத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் தலதா அத்துகோரள மேடையேறி ரணிலுக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரியவருகிறது.

தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். 2001ஆம் ஆண்டு ஐ.தே.கவின் ஆட்சி மலர காமினி அத்துகோரள முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர்.

காமினி அத்துகோரளவின் எதிர்பாராத மரணத்தால் தலதா அத்துகோரளவுக்கு அரசியலில் பிரவேசிக்கும் வாய்ப்பை ஐ.தே.க வழங்கியது. தலதா அத்துகோரள, 2004 இல் முதன்முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தலதா அத்துகோரள தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.