ரணிலின் வெற்றியை விரும்பும் ஆசிய பிராந்தியமும் மேற்குலமும்: இந்தியா மாத்திரம் நடுநிலை

0
53

தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசுகளின் பூகோள அரசியல் நகர்வுகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்குலக நாடுகளும், ஆசிய பிராந்தியமும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் பல நாடுகளில் நிலவுகிறது. இலங்கையில் அரசியலிலும் கடந்த பல தசாப்தங்களாக இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கமே நிலவுகிறது.

சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் அவர்களுக்குச் சார்ப்பான ஒருவரை ஜனாதிபதியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையில் இதற்கு முன் இடம்பெற்ற தேர்தல்களை காட்டியும் இந்தத் தேர்தலில் இராஜதந்திரிகள் மற்றும் வல்லரசுகளின் தலையீடுகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக ஆசிய பிராந்திய நாடுகளும் மேற்குலக நாடுகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் நீடிப்பதை விரும்புகின்றன.

இலங்கையில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்களில் பெரும்பாலானவை ரணிலின் ஆட்சியை விரும்புகின்றன. ஆனால், அமெரிக்கா ரணிலின் ஆட்சி தொடர்பில் திருப்தியற்ற நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவின் பல்வேறு நகர்வுகளுக்கு ரணில் ஆதரவான நிலைப்பாட்டில் இல்லையென்றும் தெரியவருகிறது.

அதேபோன்று ஆசிய பிராந்தியத்தில் சீனா ரணிலின் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன், இந்தியா மௌனம் காத்து வருகிறது. என்றாலும், இந்திய “றோ“ பல்வேறு ரகசிய நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக இந்தியா மௌனம் காப்பதாகவும் அமையபெறும் அரசாங்கத்துடன், இணைந்த பயணிக்க உத்தேசித்துள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அடுத்து அமையும் எந்தவொரு அரசாங்கத்துடன், இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக கூறியிருந்தார். அவரது இந்த கருத்து இந்தியாவின் மௌனத்தை வெளிப்படுத்துகிறது.

என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெற்றிபெறுவதை இந்தியா விரும்புவதாக பல்வேறு புலனாய்வு செய்தியாளர் கடந்த காலத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

என்றாலும், ஆசிய பிராந்தியத்தில் பலமான நாடுகளாக உள்ள ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகள் ரணிலுடன் சுமூகமாக உறவை கொண்டுள்ளதால் சமகால ஆட்சியின் நீட்சியை இந்த நாடுகள் விரும்புகின்றன.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள சகல கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரில் ஒருவருக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

என்றாலும், தேர்தலை வெற்றிக்கொள்ள ரணில் விக்ரமசிங்க தரப்பு பல்வேறு இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பிரசார உத்திகளை கையாண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.