சிந்துஜாவின் மரணத்தின் எதிரொலி: வைத்தியர் ஒருவரும் பணிநீக்கம்

0
43

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றச் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(20) மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை பணிப்பாளர், அருட்தந்தையர்கள், வைத்திய நிபுணர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் எதிர்கால நகர்வு தொடர்பாகவும் மக்கள் அச்சமின்றி வைத்தியசாலைக்கு வரும் சூழலை ஏற்படுத்தி முன்னோக்கி நகர்வோம் என்னும் நோக்கு நிலையில் பல விடயங்கள் அறிவு பூர்வமாக ஆராயப்பட்டன.

மேலும், சில விடயங்களுக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக அரசாங்க அதிபர் கூறினார். அத்துடன் இன்முகத்தோடு நோயாளரை அணுகும் முறைமை தொடர்பில் பயிற்சி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், சிந்துஜாவின் துன்பியல் சம்பவம் போன்று இனி நிகழக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.