அமெரிக்காவில் ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடியவர் என்றும் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைக் குறிப்பிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் புகழ்ந்துரைத்து உள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப்புக்கு எதிராகப் போட்டியிடும் ஆற்றலைப் பெற்றவர் அவர் என்றும் பைடன் கூறினார்.
சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் உரையாற்றிய பைடன், மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஜனாதிபதி பதவியில் இருந்து தாம் விடைபெற இருப்பதை உருக்கத்துடன் அவர் வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி பொறுப்பில் இருந்து அதிகாரபூர்வமாக விடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தபோதிலும் அரை நூற்றாண்டு காலம் நாட்டுக்காகத் தாம் பணியாற்றியதாக பைடன் தமது உரையில் குறிப்பிட்டார்.
அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி ஆதரவளித்தனர்.
மாநாட்டில் ஜனாதிபதி பைடன் உரையாற்றுவார் என்று மேடையில் அவரது மகள் ஆஷ்லி அறிவித்ததும் கண்களில் திரண்ட நீரைத் துடைத்தவாறே கட்சியினரை நோக்கிக் கையசைத்தார் பைடன்.
‘பைடனை நேசிக்கிறோம்’ என்ற வாசகங்களுடனான வாழ்த்து அட்டையை கூட்டத்தினர் ஏந்தி இருந்தனர். அதனைக் கண்ட பைடன், “நானும் உங்களை நேசிக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பின்னர் உரையாற்றிய அவர், “நாட்டின் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்ககளிக்கத் தயாராகிவிட்டீர்களா? அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகிவிட்டீர்களா?
“உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், கமலா ஹாரிசையும் டிம் வால்சையும் தேர்ந்து எடுக்க ஆயத்தமாகிவிட்டீர்களா?” என்று கேள்விகளை எழுப்பினார்.
எதிர்த்தரப்பு வேட்பாளர் டிரம்பை பலமுறை சாடிய பைடன், கமலா ஹாரிசும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வால்சும் இதுவரை கண்டிராத ‘சிறந்த தொண்டூழியராக’ தாம் வருங்காலத்தில் இருக்கப்போவதாக உறுதி அளித்தார்.
நான்கு நாள் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பைடன் ஆற்றிய உரை, கமலா ஹாரிசுக்கு ஆதரவான எழுச்சியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வலம் வந்த பைடன் கடந்த மாதம் அதிலிருந்து விலகி துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழிவிட்டார்.