புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான மனைவி உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று (17.08) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக வெளிநாட்டில் தொழில்புரிந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வந்துள்ளார்.
இதன்பின்னர் அவர் மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 07 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை தொடர்பிலிருந்த நபரை தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.
தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவருக்கும் நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் மற்றொருவருடன் வாழ்வதற்கு விரும்பினால் பிள்ளைகளையும் உன்னுடைய பாதுகாப்பில் வளர்க்குமாறு மனைவியிடம் கூறிய போது அதற்கு மனைவி மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 04 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு வீட்டிலிருக்குமாறு கோரினேன்.
தனது பேச்சை நிராகரித்த மனைவி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோபத்தில் சமயலறையில் இருந்த பெற்றோலை மனைவி மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.