அரியநேந்திரனுக்கு இரண்டு வாரம் அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க தடை

0
62

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும். நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார்.

அது அதி தீவிர சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலை தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தெளிவாக மக்களை வழிப்படுத்துவற்காக தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆவணம் ஒன்றை தெளிவாக வழங்கவுள்ளோம்.

தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது. சென்ற கூட்ட தீர்மானத்தின் படி விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து அவருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய பதில் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். அதுவரைக்கும் எமது கட்சியின் எந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். அந்தப் பின்னணியில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளது.

கட்சி இது சம்மந்தமாக எமது ஆதரவாளர்களுக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் ஒருவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். இதனால் மேடைகளில் ஏறி ஆதரித்துப் பேசும் போது அவதானமாக இருக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். எமது கட்சி இது வரை யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.