இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இரண்டு தேரர்கள் உட்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை. 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றி பெற்றியிருந்தார்.
2005ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் போட்டியிடவில்லை. நாட்டின் சனத்தொகையில் 52 வீதமான பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அதில் 5.8 வீதமானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கின்றனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தேரர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அக்மீமன தயாராதன தேரர் மற்றும் பத்தரமுல்லை சீலரதன தேரர் ஆகியோர் இவ்வாறு போட்டியிடுகின்றனர்.
பா.அரியநேத்திரன், முகம்மது இல்லயாஸ், அபுபக்கர் இன்பாஸ், மயில் வாகனம் திலகராஜ் ஆகிய நான்கு வேட்பாளர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் ஆவர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் போட்டியிடுகின்றனர்.
இதன்படி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ரொஷான் ரணசிங்க, விஜயதாச ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் சரத் கீர்த்திரத்ன, கே.கே.பியதாச சிறிபால அமரசிங்க, அனுர சிட்னி ஜயரத்ன, திலகராஜ் மற்றும் அனுருத்த பொல்கம்பலா ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது என அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.