திவாலாகும் நிலையில் பங்களாதேஷ்; அடுத்து நடக்கப்போவது என்ன?

0
66

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்தபிறகு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ள போதும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பங்களாதேசில் பணவீக்கம் அதிகரிப்பதோடு, அந்நிய செலாவணி கையிருப்பு சரிய தொடங்கி உள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் அந்த நாடு ‛திவால்’ நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

எனினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் ஆங்காங்கே சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடங்கி உள்ளன. இதனால் 7 லட்சம் இந்துக்கள் டாக்கா உள்பட 2 இடங்களில் கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அதேபோல் இந்து கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளனர். இதனால் தொடர்ந்து பங்களாதேசில் பதற்றம் என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் தான் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக பங்களாதேஷின் புள்ளியியல் முகமை சார்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி நுகர்வோர் விலை குறியீடு (பணவீக்கம்) என்பது ஜூலை மாதம் 11.66 சதவீதத்தை தொட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக உணவு பணவீக்கம் என்பது 13 ஆண்டு இல்லாத அளவுக்கு 14 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் பங்களாதேஷின் சென்ட்ரல் வங்கியின் தரவுப்படி ஜூலை 31ம் திகதி பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 20.48 பில்லியனை அமெரிக்க டாலரை எட்டியது.

இது முந்தைய மாதமாக ஜூன் மாதத்தில் 21.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஒரு மாதத்தில் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிக அமெரிக்க டாலர் காலியாகி உள்ளது.

இது பங்களாதேஷத்திற்கு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய வங்கியும் பணக்கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுக்க முடியது.

ஒரு நேரத்தில் பொதுமக்கள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். இதனால் நாட்டின் வணிக துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி என்பது ஏற்பட்டுள்ளதுடன் நாட்டில் தற்போதைய நிலை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அந்த நாடு திவால் நிலைக்கு கூட செல்லலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.