மக்களாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டியுள்ளது. மக்களுடன் உடன்படிக்கை செய்துள்ள தேசிய மக்கள் சக்தியுடன் கோர்க்குமாறு அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இன்று வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
”கடந்த சில நாட்களாக கட்சிகளுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு வருகின்றன. இந்த உடன்படிக்கைகள் மக்களுக்காக கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகளா? இல்லை.
அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துக்கொள்ளல் மற்றும் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விடயங்களை பகிர்ந்துகொள்ளும் விடயங்களே அந்த உடன்படிக்கைகளில் உள்ள விடயங்கள்.
ஆனால், எமது உடன்படிக்கை மக்களுடன்தான். இத்தகைய மோசமான ஆட்சியாளர்களை விரட்டியக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. எமது நாட்டின் இந்த அரசியல் கலாசாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாட்டின் சாதாரண மக்கள் வெற்றிபெற போகும் தேர்தல் இதுதான். இதுதான் நாட்டு மக்களை புதிய திசையை நோக்கி நகர்த்தும் தேர்தலும். அனைத்து மக்களையும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைக்கிறோம்.” என்றார்.