நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாலஸ்தீன தூதுவருடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துக்கொண்டு பாலஸ்த்தீன மக்களுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர். ஸுஹைர். எம். எச். சஹிட்டுடன் இன்று பிரியாவிடை சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாலஸ்தீன மக்களுக்கு தனது தொடர்ச்சியான ஆதரவை தருவதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் இரு நாடுகளையும் பிணைக்கும் வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலியுறுத்தினார். அத்தோடு பாலஸ்தீன மக்கள் மீதான அமைச்சரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் வகையில், டாக்டர். சஹிட், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பாலஸ்தீன கெஃபியை பரிசாக வழங்கினார்.
மேலும் பாலஸ்தீன மக்கள் பாரிய இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளான இக்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சாதாரண இலங்கையர்கள் எவ்வாறு பாலஸ்தீன மக்களின் நலனுக்காகப் பங்களிக்க முன்வந்துள்ளனர் என்பதைத் தூதுவர் இதயப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் தனது ஒரு தசாப்தகால இராஜதந்திர சேவையில் இலங்கை மக்களுடன் அவர் கட்டியெழுப்பிய வலுவான தொடர்புகள் மற்றும் பிணைப்புகள் காரணமாக, இலங்கையை விட்டு வெளியேறுவதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சிரமங்களை பாலஸ்தீன தூதுவர் எடுத்துரைத்தார்.
பாலஸ்தீன பிரச்சினைக்கு இலங்கை மக்கள் அளித்த ஆதரவிற்கும் ஒற்றுமைக்கும் தூதுவர் பாராட்டு தெரிவித்தார். அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன் ஐக்கிய மக்களாக ஒன்றிணைந்து செயற்படுமாறு இலங்கையர்களை வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தூதுவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.
பாலஸ்தீனத்திற்கான உலகளாவிய ஆதரவு இறுதியில் பிராந்தியத்தில் அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
பாலஸ்தீன மக்களுக்கு தனது தனிப்பட்ட ஆதரவையும், அதே போல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) ஆதரவையும் தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பரஸ்பர ஒற்றுமையின் வெளிப்பாட்டுடன் இச்சந்திப்பு இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.