இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம்!

0
56

இலங்கையில் குறைந்த வசதிகளுடன் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்லது.

இந்த அதிசய கிராமம்  இலங்கையின் அனுராதபுரத்தில் திரப்பனய பிரதேச செயலகப் பிரிவில் அனுராதபுரம், இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் அமைந்துள்ளது.

தினிப்பிட்டிகம கிராமம்

தினிப்பிட்டிகம என்றழைக்கப்படும் இக்கிராமத்தில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 15 குடும்பங்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இன்றி சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் இவர்களின் கிராமத்திற்குள் செல்ல சரியான வீதி இல்லாத பின்னணியில், வெளியூர்களில் இருந்து வரும் லொரிகளில் குடிநீரை அக்கிராமவாசிகள் பெறுகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான வீடுகள் களிமண் அல்லது தகர கூரைகளால் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கிராமத்தில் வசிப்பவர்கள் கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பன இவர்களின் தொழிலாக உள்ளது.

அதேவேளை குறைந்த வசதிகளின் கீழ் வசிப்பவர்களுக்கு விசேட தேவையுடையவர்களுக்கு உதவித் தொகையாக 5,000 ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து பெற உரிமை உண்டு.

எனினும் அடிப்படை தேவைகளுக்கு அந்தத் தொகை போதாததால் கூலி வேலை தேடிச் சென்றாலும் விசேட தேவையுடைய இவர்களுக்கு கூலி வேலைகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்பத் தொகை, வாழ்க்கை நடத்தவோ, குழந்தைகளின் கல்வியைத் தொடரவோ போதாது என்கின்றனர் கிராமவாசிகள்.

இக்கிராமத்தில் குளிப்பதற்கு அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரி உள்ள போதிலும் அதுவும் வறண்டு காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோடீஸ்வரர் ஒருவரால் இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வடிகட்டியும் பழுதடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.