பங்களாதேஷில் தாக்கப்படும் இந்துக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
53

மக்கள் புரட்சியை தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவு வழங்கியமையால் பங்களாதேஷில் உள்ள இந்துகள் இலக்கு வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகமான நியூயோர்க் டைம்ஸ் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளதுடன், அதற்கு பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். ‘பிரதமர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் பழிவாங்கும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்’ என்ற தலைப்பில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் 170 மில்லியன் மக்கள் தொகையில் 7.5 சதவீதமாக இருக்கும் இந்து மக்கள், ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதில் இருந்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த வாரத்தில், சில இந்துக்களின் 300 வீடுகள், வணிக நிறுவனங்கள், கிட்டத்தட்ட 20 கோயில்கள் தாக்கப்பட்டதாகவும், அழிக்கப்பட்டதாகவும் அல்லது எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறைந்தது மூன்று இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 30 மாவட்டங்கள் மற்றும் உட்பிரிவுகளில் இருந்து இந்து எதிர்ப்பு வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை பலரும் விமர்சித்துள்ளனர். இது குறித்து தமது கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, நியூயார்க் டைம்ஸ் இந்துக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துகிறது என்று பயனர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.