பிரதமர் தினேஷ் குணவர்தன மீது முறைப்பாடு: சட்டத்தை மீறக் கூடாது எனவும் எச்சரிக்கை

0
86

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கதிர்காமம் கிரிவெஹரையில் இந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை வழிபாடுகள் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பஃப்ரல் (PAFFERAL) அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு அளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

“தற்போதைய பிரதமருக்கு ஆசிர்வாதம் வழங்குவதாகக் கூறி கதிரகாமம் கிரிவெஹரையில் இம்மாதம் 10 ஆம் திகதி விசேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அதில் கலந்துக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளதாகவும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகவும் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் மாறுவதால் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நடத்தப்படும் ஆசிர்வாத பூஜையில் கலந்துக்கொள்வது சட்டப்படியும் நெறிமுறையாகவும் அமையாது என்பது எங்களது நம்பிக்கை.

இதேவேளை தேர்தல் பணியில் சிறப்புப் பங்கு வகிக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அவர்கள் மீது சமூகத்தில் சந்தேகம் எழுந்தால் தேர்தல் செயற்பாடுகள் பற்றிய நேர்மை கடுமையாக பாதிக்கப்படும்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகளுக்கு மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டால், அதே நிலைமை தேர்தல் பணிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும். பாரபட்சமில்லாமல் இருந்தால் மட்டும் போதாது அதை உணரும் விதத்தில் நடக்க வேண்டும் என்பது தேர்தல் காலத்தில் வலியுறுத்தப்பட வேண்டிய தனிக் காரணி.

இந்தக் கண்ணோட்டத்தில் தேர்தல் பணியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளை சிறப்பு ஆசீர்வாத பூஜைக்கு அழைக்கக் கூடாது என்பது எங்களின் நம்பிக்கை இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.