இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க (Arjuna Ranatunga) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளார்.
நீண்டகாலமாக தம்முடன் போட்டியிட்டு வரும் வர்த்தகர் மற்றும் அரசியல்வாதியான திலங்க சுமதிபாலவுடன் இணைந்து கூட்டணியை ஆரம்பிக்கும் நிகழ்வில் ரணதுங்க கலந்து கொண்டார்.
இதன்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அமைப்பான ‘புரவெசி ஹண்டா’ பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் ஜி.எல்பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோர் பரந்த கூட்டணியில் உள்ளடங்கியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 5ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன (Hasan Tillakaratne) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்து கொண்டார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாறி மாறி கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.