தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை இன்று செவ்வாய்க்கிழமையுடன் (06) மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து, தொழில் அமைச்சரினால் கடந்த மே மாதம் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, அகரபதன பிளான்டேஷன்ஸ் லிமிடெட் உட்பட 21 தோட்டக் கம்பனிகளால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சம்பள விவகாரம் தொடர்பாக தங்களுடன் கலந்தாலோசிக்காமல் தொழில் அமைச்சர் எடுத்த முடிவு சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறியிருந்தனர்.
எனவே, இந்த முடிவை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்ததாக கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1700 ரூபாவாக உயர்த்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து தொழில் அமைச்சு புதிய வர்த்தமானியை கடந்த ஜூலை 24 அன்று வெளியிட்டது.
சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பின்புலத்திலேயே கம்பனிகள் தமது மனுவை வாபஸ் பெற்றுள்ளன.
இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், ”கம்பனிகள் தமது மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிய முடிந்தது.
எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூட உள்ள நிலையிலேயே கம்பனிகள் மனுவை வாபஸ் பெற்றுள்ளன. கூடிய விரைவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம்.
1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதும் அது சாத்தியமில்லை என்றனர். ஆனால் ஆறு மாதத்திற்குள் 1000 ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம்.” என்றார்.