எதிர்வரும் 25ம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என யாழ்.பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக்கு கிழக்காக அடுத்த 36 மணி நேரத்தில் (அநேகமாக 22.05.2024) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எதிர்வரும் 23ம் திகதி மாலையளவில் ஒரு சிறிய புயலாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 25ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அதிகளவான இடி மின்னலுடன் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அவதானமாக இருப்பது அவசியம்.
அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட கூடுதலான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாளை முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.
வடக்கு மாகாணத்தின் கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மி.மீ. ஆகும்.
மே மாத மழை நாட்கள் சராசரியாக 6ஆகும். ஆனால் இவ்வாண்டு, மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடஞ்சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 280மி.மீ. மழை கிடைத்துள்ளது.
இம்மாத இறுதியில் இதன் அளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதிகள் அதிக அளவிலான மழைவீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.