மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் 21 ஆம் திகதி யாழ்.முற்ற வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப்படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள்.
ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர் நடிகை குஷ்பு. கலா மாஸ்டர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடாத்தியவர்.
திசை திருப்பல்
இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக அந்த நிகழ்ச்சியை நடாத்தினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு.
குஷ்பு தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறும் போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.
அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவது கனடாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர். இந்திய நடிகை ரம்பாவின் துணைவர். புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றி பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவர்.
யாழ்ப்பாணம் கந்தர் மடம் சந்தியில் நோர்தேன் யுனி என்ற பெயரில் சிறிய பல்கலைக்கழகத்தை கட்டியிருக்கிறார். அவர் ஹரிஹரனை முற்ற வெளியில் பாட வைக்க விரும்புகிறார்.
அந்த நிகழ்ச்சியின் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக இரண்டு பிரபல்யங்களை இணைத்திருக்கிறார். அதுதான் இப்பொழுது பிரச்சினை.
சந்தோஷ் நாராயணன்
அப்படித்தான் கடந்த மாதம் நடந்த சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியது. ஆனால் சந்தோஷ் நாராயணன் கூறுகிறார் “நான் ஈழத்தமிழ்க் குடும்பத்தில் ஒருவன்” என்று.
அவருடைய மனைவி கோண்டாவிலைச் சேர்ந்தவர். சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் பேசும்போது, அவர் புலம்பெயர்ந்த தமிழர்களே தன்னைப் போன்ற இசையமைப்பாளர்களுக்கு “சாப்பாடு போடும் கடவுள்கள்” என்று வர்ணிக்கின்றார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் கூறுகிறார். அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்.
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்
கோடம்பாக்கத்தில் வெற்றிகரமாக முதலீடு செய்தவர். இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமளவுக்கு கோடம்பாக்கத்தில் செல்வாக்கு மிக்கவர்.
கொழும்பில் வங்குரோத்தாகிய எதிரிசிங்க வணிகக் குழுமத்தை விலைக்கு வாங்கியவர். ஐந்து சிங்களப் படங்களில் அவர் முதலீடு செய்கிறார்.
அண்மையில் அவர் தனது மனைவியோடு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார். இலங்கையில் தனது சொத்துக்களையும் முதலீட்டையும் பாதுகாப்பதற்கு அவருக்கு அது தேவையாக இருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன், ஹரிஹரன் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு முதலீடு செய்வது புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள்.
அவர்களும் போரின் விளைவுகள்தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். அவர்கள் அந்நியர்கள் அல்ல. அவர்களோடு தமிழ் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் உரையாட வேண்டும்.
நமக்காக நாமே போராட வேண்டும்
முதலாளிகள் எப்பொழுதும் லாபத்தை நோக்கியே சிந்திப்பார்கள். அது அவர்களுடைய தொழில் ஒழுக்கம். ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்கள் அந்த முதலாளிகளை எப்படி ஆகக்கூடிய பட்சம் தேசியப் பண்பு மிக்கவர்களாக மாற்றுவது என்று சிந்தித்து உழைக்க வேண்டும்.
அதுதான் தேசிய அரசியல் ஒழுக்கம். அவர்களை எப்படித் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது? முதலில் ஈழத் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிறத்தியாரை எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள்தான் போராட வேண்டும்.
தமிழகத்தவர்களோ அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களோ எந்தளவுக்குப் போராடலாம் என்பதில் வரையறைகள் உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்கலாம்? எந்த அளவுக்கு எதிர்பார்க்கலாம்? என்பதில் பொருத்தமான விளக்கங்கள் இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியவாதம்
உதாரணமாக ஒரு சிங்கள முற்போக்குவாதியிடம் அவர் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.
அவர் இனவாதத்துக்கு எதிராக இருந்தாலே போதும். சிங்கள திரைப்படக் கலைஞர் பிரசன்ன விதானகே எடுக்கும் படம், தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.
அது இனவாதத்தை எதிர்த்தாலே போதும். அதுவே தமிழ் அரசியலுக்கு வெற்றிதான். தமிழரல்லாத வேற்று இனத்தவர் ஒருவர் கட்டாயம் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவர் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலே போதும். அப்படித்தான் தமிழகமும். தமிழகத்தில் இருப்பவர்கள் 100% ஈழத் தமிழ் அபிமானிகளாக இருக்க வேண்டும் என்றில்லை.
அங்கே 19 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் என்பது மகத்தானது. அதற்காக எல்லாரையும் தீக்குளிக்கக் கேட்கலாமா? அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக மாநில அரசாங்கத்தின் மீதும் மத்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைக் கொடுத்தாலே அது மகத்தான விளைவுகளைத் தரும்.
2009க்குப் பின் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் ஈழத்தமிழ் அரசியலில் இருந்து விலகிச்செல்லும் போக்கு அதிகரித்துவரும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழகத்தை எப்படிக் கையாள்வது என்ற அடிப்படையிலும் தமிழகப் பிரபல்யங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அணுக வேண்டும்.
தேசத்தை திரட்டும் அரசியல்
ஏன் அதிகம் போவான்? தாயகத்தில் சொந்தத் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் தமிழ்த் தேசிய அரசியற் பரப்புக்கு வெளியே நிற்கிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அங்கஜனிற்கும் பிள்ளையானுக்கும் வாக்களித்தவர்களை எதிரிகளாகப் பார்க்கலாமா? அவர்கள் எங்களுடைய மக்கள் இல்லையா? அவர்களை எப்படித் தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பது என்றுதானே சிந்திக்க வேண்டும்? தாயகத்திலேயே தமிழ்ச் சனத் தொகையில் ஒரு தொகுதி தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்கின்றது.
அப்படியென்றால் தாயகத்துக்கு வெளியே நிலைமை எப்படியிருக்கும்? அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்பவர்களை தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பதுதான் தேசத்தை திரட்டும் அரசியல்.
புலம்பெயர்ந்த தமிழர்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கூட எதுவரை எதிர்பார்க்கலாம் என்பதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் அவர்கள் கள யதார்த்தத்திற்கு வெளியே வசிக்கின்றார்கள்.
அவர்களை எப்படி ஆகக்கூடிய பட்ஷம் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்றுதான் சிந்திக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு விதத்தில் தாயகத்தின் நீட்சியும் அகட்சியுந்தான்.
ஆனால் அவர்கள்தான் தமிழக சினிமா பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கான காசைச் செலவழித்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.
அண்மையில் கனடாவில் நடந்த சிற் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்குரிய பட்ஜெட் 10 லட்சம் கனேடிய டொலர்கள் என்று கூறப்படுகிறது.
குஷ்பு
குஷ்பு ஒரு நடிகை மட்டுமல்ல. அரசியல்வாதியும் கூட. 2010ல் அவர் திமுகவில் சேர்ந்தார்.2014 இல் அவர் கொங்கிரஸில் சேர்ந்தார். 2020இல் அவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.
அதாவது இப்பொழுது அவர் ஆளுங்கட்சியில் இருக்கிறார். 2014 இல் அவர் கனடாவுக்குப் போனார். மார்க்கம் ஏயர் மைதானத்தில் நடந்த அவருடைய நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றினார்கள்.
அதில் அவருடைய ரசிகர்கள் அவருடைய காலில் விழுந்ததைத் தான் கண்டதாக ஒரு சமூக செயற்பாட்டாளர் சொன்னார். பிந்திக் கிடைத்த தகவலின்படி ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
வாழ்வின் யதார்த்தம்
ஒருபுறம் புலம்பெயர் தமிழர்கள் தமிழகச் சினிமாப் பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கில் காசைக்கொட்டிக் கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு புறம் நீதிக்கான போராட்டத்தின் ஈட்டி முனையாகவும் காணப்படுகிறார்கள். இந்த இரண்டும் கலந்ததுதான் புலம்பெயர்ந்த வாழ்வின் யதார்த்தம்.
எனவே புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் பொழுது அதனை கொழும்பு மைய நோக்கு நிலையில் இருந்து செய்வதற்கு பதிலாக தேச நிர்மாணம் என்ற நோக்கு நிலையில் இருந்து செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும்.
தாயகத்தில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அதை நோக்கி முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
2009க்கு பின் கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட நாடு இலங்கை. மே18க்கு பின் யுத்தகளத்தில் எடுக்கப்பட்ட எல்லா படங்களும் இலங்கை அரச படைகள் தமது கமராக்களினாலும் தமது கைபேசிகளாலும் எடுத்த படங்கள்தான்.
அந்தப் படங்கள்தான் பிந்நாளில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சான்றுகளாக மாறின. அதாவது கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு.
அதுபோலவே ஈழத் தமிழர்களும் 2009க்கு பின் சமூக வலைத்தளங்களால் கைபேசிச் செயலிகளால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக மாறி வருகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் ஒருவர் மற்றவருக்கு எதிராக அள்ளி வீசும் அவதூறுகளால் தேசம் சிதறிக் கொண்டே போகிறது. சமூக வலைத் தளங்களால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசம்? இனப்படுகொலையால் புலப் பெயர்ச்சியால் மெலிந்து சிதறிய ஒரு சிறிய தேசம், சமூக வலைத்தளங்களில் மேலும் மேலும் சிதறி கொண்டு போகிறது.
யாதும் ஊராகப் புலம் பெயர்ந்து விட்டோம். ஆனால் யாவரும் கேளீரா? அதாவது யாவரும் நண்பர்களா? தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. நாமே நமக்குத் தேடிக் கொள்பவையா?