2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் பெரும்பாலான பகுதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன.
தமது பிரதிநிதிகள் ஆளுங்கட்சியிலும், அரசாங்கத்திலும் அங்கம் வகித்தால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பகல் கனவு கண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இரண்டு பிரதிநிதிகளை ஆளும் தரப்புக்கு தெரிவு செய்தார்கள் அவர்கள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் பிரதான வலியுறுத்தலாக காணப்படுகிறது.
பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் மாத்திரமல்ல அவர்களுக்கு துணை போனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களின் அரசாங்கம் தான் இன்றும் நடைமுறையில் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. மீன்பிடி மற்றும் விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தவில்லை.
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறான பின்னணியில் எவ்வாறு கடற்றொழிற்றுறையை மேம்படுத்த முடியும்.” என தெரிவித்துள்ளார்.