வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞருக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் – சரவணபவன்

0
47

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனுக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிவிப்பில்,

“பொலிஸாரின் தடுப்புக்காவல் கொலைகள் எந்த ஒரு இடத்திலும் இறந்தவர்களுக்கான நீதி நிலைநாட்டபடவில்லை. இந்த இடத்திலும் நீதி நிலைநாட்டபடாது போய்விடும் என்ற அச்சம் தான் எமக்கு எழுகின்றது. ஏனென்றால் பொலிஸ் திணைக்களத்தினை தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பான திணைக்களமாக ஒரு பொழுதும் கருதியது கிடையாது .அந்த பொலிஸ் திணைக்களம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு திணைக்களமாக தான் தமிழ் மக்கள் பார்த்து வருகின்றார்கள்.

அவ்வாறானதொரு திணைக்களம் தமிழ் மக்களின் நீதியை நிலைநாட்டும் என்பதில் எந்த ஒரு துளியும் நம்பிக்கை இல்லை. இந்த சம்பவத்தில் தெட்டத்தெளிவாக அவர் உயிரிழப்பதற்கு முதல் வழங்கிய வாக்குமூலம் சரி உறவினர்களின் வாக்குமூலம் சரி அனைத்துமே அவர் பொலிஸாரது தடுப்பு காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகதிற்கிடமின்றி காணப்படுகின்றது.

இங்கே பொலிஸார் இருவர் விசாரணைக்காக இடமாற்றம் செய்யப்படுதல் என்பது ஒரு வழமையான விடயம் அதாவது விசாரணைக்கான ஆரம்ப நடைமுறை விடயம் ஆனால் இங்கே ஒரு சம்பவத்தின் அதிர்வலை எழுகின்ற பொழுது அதன் கண்துடைப்புக்காக நகர்த்தி விட்டு பின்னர் மக்கள் அதனை கடந்து செல்லுகின்ற பொழுது அதனை அப்படியே பேசாது விடுகின்றமையே இங்கே நடந்து வருகின்றது.

அதாவது தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தினை தான் பொலிஸ் திணைக்களம் செய்து வருகின்றது. இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராட முனைகின்றோம். பொலிஸாருடைய செயற்பாட்டினை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது .

அவர் சந்தேகநபராக இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் சந்தேக நபர் தான். சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் சித்திரவதை செய்யலாம் என்ற எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

தமிழர்கள் என்ற காரணத்திற்காக அத்துமீறி செயற்படுகின்றார் கொழும்பில் கூட அண்மையில் ஒரு தமிழ் பெண்மணி பொலிஸ் தடுப்பு காவலில் இறந்திருந்தார். தமிழ் மக்கள் மீதான சத்தம் இல்லாத அட்டூழியத்தை பொலிஸார் நிகழ்த்தி வருகின்றனர்.

இங்கே நாம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதிலேயோ அல்லது கண்டன குரல் எழுப்புதுடனோ இதனை கடந்த போக முடியாது. முழுமையான விசாரணை முடியும் வரைக்கும் நாங்கள் அனைத்து தரப்புக்களும் முழுமையான நீதி விசாரணை முடியும் வரை எல்லா தரப்புக்களும் அவதானம் செலுத்த வேண்டும்.

வித்தியாவின் படுகொலை வழக்கில் எவ்வாறு தொடர்சியாக நீதிக்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டபட்டதோ அவ்வாறு இங்கும் நீதி நிலை நாட்டபடவேண்டும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.