அல் ஷிபா மருத்துவமனையில் பணயக்கைதிகள்..!

0
85

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்றதுடன் , இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம் 

இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுவரும் நிலையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர், அங்குள்ள மருத்துவமனைகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன் காரணமாக அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்த பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர்.

அல் ஷிபா மருத்துவமனையில் பணயக்கைதிகள்; இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்! | Hostages At Al Shiba Hospital Evidence By Israel

இவ்வாறான நிலையில் அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் பாதுகாப்பு படை, எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்,

ஒரு நபரை ஆயுதம் ஏந்திய சிலர் மருத்துவமனைக்குள் கொண்டு வருவதும், ஒருவரை ஸ்டிரெச்சரில் கொண்டு வருவதும் பதிவாகியிருக்கிறது. “நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் என இஸ்ரேலிய பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு வந்துள்ளனர்.

பணயக்கைதிகளில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனை படுக்கையில் கொண்டுசெல்லப்படுகிறார். மற்றவர் நடந்து செல்கிறார். படுகொலை நடந்த அக்டோபர் 7ஆம் தேதி, அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பயங்கரவாத உள்கட்டமைப்பாக பயன்படுத்தியது என்பதை இந்த காட்சி நிரூபிக்கிறது” என இஸ்ரேல் ராணுவம் விவரித்துள்ளது.

அதேவேளை இந்த இரண்டு பணயக்கைதிகளையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி குறிப்பிட்டார்.