நியூசிலாந்தில் இனப்பிரச்சினை வெடிப்பு; 14ஆம் திகதி பொதுத் தேர்தல்

0
84

நியூசிலாந்தில் இம்மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் அங்குக் கூட்டு அரசாங்கம் அமைக்க மிகவும் முனைப்புடன் செயல்படுகின்றன.

அதனையொட்டி இனம், பழங்குடி மவோரி மக்களுடனான உறவுகள் போன்ற பிரச்சினைகள் அந்நாட்டில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. இப்பிரச்சினைகளால் அந்நாட்டில் இனப்பிளவுகளை உருவாக்க வலதுசாரிக் கட்சிகள் தூண்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2020ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் திருவாட்டி ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.

ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகள் வலதுசாரி அரசாங்கங்களைத் தேர்ந்தெடுத்த நேரத்தில் நியூசிலாந்து முற்போக்கான கொள்கைகளுடன் தனித்து நின்றது.

மூவாண்டுகள் கழிந்த நிலையில் அந்நாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராகவும் பழங்குடி இனமான மௌரிக்கு ஆதரவாகவும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தத் தேர்தலில் இனவாதம் மிகவும் வெளிப்படையாகத் தெரிவதாக மௌரி பழங்குடியினத் தலைவரான நைடா கிளாவிஷ் கூறினார்.

வலதுசாரி ஏசிடி கட்சி, பாப்புலிஸ்ட் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும், தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின்கீழ் மௌரி இன மக்களை நாட்டின் மக்களாக அங்கீகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எதிரான கொள்கைகளை ஊக்குவித்து வருவதாக அவர்கள்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், அக்குற்றச்சாட்டுகளை அவ்விரு கட்சிகளும் மறுத்துள்ளன. தங்கள் கொள்கைகள் இனவெறியைத் தூண்டும் கொள்கைகள் அல்ல எனவும் மாறாக அவை அனைத்தும் நியூசிலாந்து மக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதற்கானவை எனவும் அக்கட்சிகள் தெரிவித்தன.

மேலும், மௌரி இன மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளால் பழங்குடியினர் அல்லாத குடிமக்கள் தங்களுக்கான சலுகைகளை இழக்க நேரிடுகிறது என்றும் அவை கூறின.