வறக்காபொல பிரதேசத்தில் தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக்குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே நீதவான் ஒக்டோபர் 1 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர்
வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 32 வயதான திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கனரக வாகனத்தை செலுத்தும் தந்தைக்கு உதவியாளராக பணியாற்றிய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி சிறுமியை கர்ப்பிணியாக்கியுள்ளார்.
களனியில் தந்தையுடன் பணியாற்றும் நபர் அவருடன் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அவ்வாறு வரும்போது அந்த நபருக்கும் சாரதியின் மனைவிக்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
அப்போது தாயின் அனுமதியுடன் அவளது மகளை பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தந்தையிடம் தெரிவித்த சிறுமி
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய போது அவரை பிணையில் எடுப்பதற்கு அந்த சிறுமியின் தாய் முன்வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாத கர்ப்பிணியான சிறுமி கலிகமுவ சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்டமையால் அச்சிறுமி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றதை தன்னுடைய சகோதரனும் சகோதரியும் கண்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தனது தாயிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதற்கு தாய் செவிசாய்க்கவில்லை என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.