நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு 30 வருட போராட்டத்தின் பின் மரணம்!

0
55

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். தான் அறிமுகமான படத்தின் பெயராலேயே ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அந்தப் படத்திற்குப் பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படம் தான் அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

அந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார் பாபு. இதையடுத்து படுத்த படுக்கையானார். அவரின் முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ பலரையும் நெகிழச் செய்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு காலமானார். பாபுவின் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.