கல்கமுவவில் இடம்பெற்ற விபத்துக்கள்; 4 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

0
233

சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இளம் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள வேப்ப மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள்

விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி, அவரது மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதியும், மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும் உயிரிழந்த சிறுமி காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 04 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கல்கமுவ ஆனமடுவ வீதியில் வாலசேன பிரதேசத்தில், ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற வேன், முன்னால் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த தம்பதியினர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர் 46 வயதுடைய மஹாநான்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.