இலங்கையின் புகழ்பூத்த பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம் (03) ஞாயிறு மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் ஓடாமல் நின்ற சம்பவம் பக்தர்கள் மனதில் சஞ்சலங்களை தோற்றுவித்துள்ளது.
வரலாற்றுத்தலமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர பெருவிழா கடந்த மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. தமிழ் மன்னர்கள் வகுத்த வழிமுறையின் கீழ் இன்றும் தான்தோறீச்சரம் உற்சவம் பழமை மாறா பண்பாட்டுடன் நடைபெற்றுவருகின்றது.
பக்தர்களுக்கு அதிர்ச்சி
இந்நிலையில் நேற்றையதினம் பெருமளவான பக்தர்கள் நூழ வீதி வலம் வந்த பிள்ளையார் தேர் இடைநடுவில் நின்றதாகவும் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஐந்து தடவைகள் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளமை பக்தர்களுக்கு அதிர்ச்சியையும் என்ன நிகழுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆலய பிரதம குரு தேரில் இருந்து இறங்கி கோயிலுக்குள் சென்று ஏதோ பிழை நடந்து விட்டது. ஈஸ்வரா தேரை நகர்த்தி செல் என மனமுருகி வேண்டிய பின் வரலாற்றில் முதல் தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதி வலம் வந்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை இதற்கு முதல் பல வருடங்களுக்கு முன்பும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இவ்வாறு தேர் ஓடாது நின்ற இரு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
1920 ஆண்டு தேர் ஆலயத்தை விட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும் 1933 ஆம் ஆண்டு உள்வீதியில் வலம் வந்த இரு தேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்கு பிறகு படுவான்கரை மக்கள் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்து சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இம்முறை தேர் வடம் அறுந்து ஓடாமல் நின்றது ஏன் என்ற கேள்வி கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் சஞ்சலங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளையர்களை மெய்மறக்க வைத்த கல் நந்தி
அதேவேளை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோவில் ஆகும்.
போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் “புல்லுண்ட கல் நந்தி” இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது. வெள்ளையர்களால் ஈழத்தில் சைவ சமயகோவில்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் கோவிலையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் கோவிலை உடைக்க வந்தார்கள்.
குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமையும் இவ் ஆலயத்துக்கு உண்டு.