இறம்பொடை ஆர்.பி தோட்ட பொதுமக்கள் தற்போது தமக்கென காணி உரிமை வேண்டும் என போராடி வரும் நிலையில் அது இறம்பொடை மக்களுக்கான தேவை மட்டுமன்றி ஒட்டுமொத்த மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டமாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மலையக மக்களின் காணியுரிமைக்காக பலர் பாடுபட்டு வரும் நிலையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் காணியுரிமை தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும், குறித்த பதிவின் மூலம், காணி உரிமை என்பது கடையில் வாங்கும் சரக்கல்ல..! இந்த இனவாத சூழலில் ஆயுதம் தூக்கி பெறுவதுமல்ல..! என அவர் குறிப்பிட்டுள்ளமையானது, மலையகத்தவர்களை மறைமுகமாக சாடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனடிப்படையில் “நீண்ட காலம் வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அதற்கான காரணமும் சொல்கிறீர்கள். வாழ்ந்து விட்டு போங்கள்..! சொல்லி விட்டு போங்கள்…!
ஆனால் இன்று, மலையக பரப்பில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன என்பதையும் மலையக அரசியல் பிரதிநிதிகள் தத்தம் பங்களிப்புகளை வழங்க, நாம் ஒரு இலக்கை நோக்கி நிதானமாக முற்போக்காக நடை பயணம் போகிறோம் என்பதையும் தேடியறியுங்கள்.
காணி உரிமை என்பது கடையில் வாங்கும் சரக்கல்ல..! இந்த இனவாத சூழலில் ஆயுதம் தூக்கி பெறுவதுமல்ல..!
கவனமாக காய் நகர்த்தி எமது தரப்பு நியாயத்தை உரக்க கூறி, அவர்களையும் ஏற்கச்செய்து, ஒருகணம் சத்தமிட்டு அடுத்த கணம் சிரித்து பேசி நாம் முற்போக்கு சாலையில் படிப்படியாக பயணிக்கிறோம் என்பதை என்னை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள். ஒப்பாரி வையுங்கள். குறை கூறுங்கள்.
ஆனால், அதையே முழுநேர தொழிலாக செய்யாதீர்கள். இடையில் நான்கு நல்ல ஆலோசனைகளையும் சொல்லுங்கள். என குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் காணி உரிமை தொடர்பில் மக்களை ஏமாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்குக் காணி உரிமை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற்றுக் கொள்ள ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஏமாற்றி வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டில் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த இறம்பொடை மக்களின் பிரச்சினை தொடர்பாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இறம்பொடை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாக வேலைசெய்வோருக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல வருடங்களாக செலுத்தப்படாமல் உள்ளன.
இறம்பொடை தேட்ட மக்களின் சம்பளத்திலிருந்து 90 காலப்பகுதி முதல் ஊழியர் சேமலாப நிதிக்கு பணம் அறவிடப்பட்ட போதிலும் நிர்வாகம் அதனை அவர்களின் பெயரில் வைப்பில் இடவில்லை என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்காக தொழிலாளர்கள் பல வழிகளில் போராடினாலும் எவ்விதமான பலனும் கிட்டவில்லை. இதனாலேயே அப்பகுதி மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வேலைக்கு வராவிட்டால் லயன் அறைகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கடிதம் தொடர்பான பிரச்சினையும் தற்போது வலுபெற்றுள்ளது.
மலையகம் தற்போது 200 ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், உரிய அதிகாரிகள், அரசியல் தலைமைகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.
மேலும், காணியுரிமைக்காக போராடுவோம் என தற்போது மலையக நலன் சார் அமைப்பொன்றும் உருவாக்கப்பட்டு காணி உரிமை தொடர்பிலான அரசியல் தலையீடற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.