வவுனியாவில் தாய் வீட்டுக்குள் புகுந்து லொறியுடன் சிலிண்டர்களை திருடிச் சென்ற மகன்

0
118

வவுனியாவில் வர்த்தகரான பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவர் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா, கணேசபுரம் பகுதியில் 648 எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியொன்றை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகப் பெண் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மகன்

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த வர்த்தகப் பெண்ணின் மூத்த மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தாயின் வீட்டிற்குள் புகுந்து சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்ற மகன் | Son Broke Mother House Vavuniya And Stole Cylinder

லொறியின் சாரதி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து கொண்டிருந்ததாகவும் சந்தேக நபர் வீட்டின் கதவுகளை உடைத்து காஸ் சிலிண்டர்களை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட லொறி மற்றும் காஸ் சிலிண்டர்கள் என்பன சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இன்னும் சில நாட்களில் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தையின் மரணத்தின் பின்னர் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேகநபர் இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனது தாயின் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் லொறியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர்.

சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.