உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சி
காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளை கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் சர்வதேச தொடர்புகளை இந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்காக பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
இவ்வருட ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள இந்நாட்டிற்கு வருமாறு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிபுணர்கள் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச பல்கலைக்கழகம்
காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைசார் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபடுதல், உலகளாவிய பிரச்சினைகளை பற்றி கலந்துரையாடல் மற்றும் கொள்கை கருத்துப் பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்வதும் அவர்களின் வருகையின் நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்குப் பங்களிக்க கொரிய எக்ஸிம் வங்கியும் தற்போது முன்வந்துள்ளதாகவும், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. (MIT) போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமானது, ஆராய்ச்சிக்கான பட்டப்பின் படிப்பு நிறுவனமாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்து எதிர்கால ஆய்வுகளையும் இந்த நிறுவனத்தின் ஊடாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.