காணாமல் போன பெண்ணை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்த பார்வையற்ற பெண்

0
192

காணாமல் போன பெண்மணி ஒருவரை தன் மோப்ப நாய் உதவியுடன் பார்வையற்ற பெண் ஒருவர் கண்டுபிடித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கண் பார்வையற்றவராக இருந்தாலும் நீச்சலில் கனடாவுக்குத் தங்கப்பதக்கங்கள் வாங்கிக் கொடுத்த சாதனையாளர் ஜெசிகா (Jessica Tuomela, 39).

ஆனால், அவர் தற்போது செய்துள்ள ஒரு விடயம் அவரது முந்தைய சாதனைகளையே மிஞ்சிவிட்டது. இனி அவரை ஒரு பார்வையற்ற நீச்சல் வீராங்கனையாக மட்டும் அல்ல, வேறொரு விடயத்துக்காகவும் மக்கள் நினைவுகூரப்போகிறார்கள்.

அத்துடன் அவருக்கும் அது நீங்கா நினைவாக நிலைக்கப்போகிறது.

காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் விடயம் எவ்வளவு கஷ்டம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விடயம். எத்தனை நாடுகளில் எத்தனை பொலிசார் எத்தனை அவசர உதவிக் குழுக்கள் இணைந்து தேடியும் காணாமல் போன நபரை கடைசியில் சடலமாக மீட்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் காணாமல்போன பெண்மணி ஒருவரை தன் மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார் ஜெசிகா. அதுவும் வெறும் 40 நிமிடங்களிலேயே!

வான்கூவர் தீவிலுள்ள Saanich என்னுமிடத்தில் வழ்ந்துவருகிறார் ஜெசிகா. அவரிடம் கானாமல் போனவர்களை மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிக்கும் லூசி என்னும் மோப்பநாய் ஒன்று உள்ளது.

சமீபத்தில் அவர் வாழும் பகுதியிலுள்ள பெண்மணி ஒருவர் ஞாபக மறதி பிரச்சினை கொண்டவர் காணாமல் போய்விட்டிருக்கிறார். அக்கம்பக்கத்தவர்கள் ஜெசிகாவின் உதவியை நாட லூசியுடன் அந்தப் பெண்ணைத் தேடிப் புறப்பட்டுவிட்டார் ஜெசிகா.

அவர் எங்காவது மரம், கல் போன்ற தடைகளில் மோதிவிடாமல் இருப்பதற்காக அவருடன் மற்றொரு பெண்ணும் சென்றுள்ளார்.

மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள Elk என்னும் ஏரியின் அருகில் ஜெசிகாவை அழைத்துச் சென்றுள்ளது லூசி. அங்கே காணாமல் போன அந்தப் பெண்மணி இருந்திருக்கிறார். அவரைத் தன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் அவரது குரலைக் கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் ஜெசிகா.

இவ்வளவு காலமும் மக்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற ஆசையிலிருந்த ஜெசிகாவின் ஆசை லூசி உதவியுடன் நிறைவேறியதில் அவருக்கு சொல்லொணா மகிழ்ச்சி!