எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவேந்திய ஈழத் தமிழர்

0
165

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும்  46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் ,   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

 நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டடேன்.

 எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழன்

இதற்காக நான் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தபோது என்னுடன் 5 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தனர்.

இதன் முதல் நிலையாக பேஸ் கேம்ப் (Base camp) 5350 மீற்றர் உயரம் வரை சென்று அங்கு தங்கியிருந்து, மீண்டும் முதலாவது கேம்ப் (Camp 1) 6000 மீற்றர் உயரம் வரை சென்றோம். பின்னர் அங்கிருந்து 2ஆவது கேம்ப் (Camp 2) 6400 மீற்றர் உயரம் வரை சென்று, அங்குள்ள காலநிலைக்கேற்ப எம்மை தயார்ப்படுத்திக்கொண்டோம்.

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவேந்திய ஈழத் தமிழர் | Eelam Dushyanthan Mullivaikal On Mount Everest

அதன் பின்னர், அங்கிருந்து 3ஆவது கேம்ப் (Camp 3) 7300 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கிருந்து 4ஆவது கேம்ப் ( Camp 4) 7925 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கும் எம்மை காலநிலைக்கேற்ப தயார்ப்படுத்தும்போது கடும் குளிரினால் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

ஆனால், கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என துஷியந்தன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் விவேகானந்தன் துஷியந்தன் உள்நாட்டு போர் காரணமாக  13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவேந்திய ஈழத் தமிழர் | Eelam Dushyanthan Mullivaikal On Mount Everest

அத்தோடு மரதன், சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இவர் மலையேறுவதை ஆரம்ப காலங்களில் பொழுதுபோக்காக கொண்டிருந்தார். இந்நிலையில், 2010ஆம் ஆண்டு மலேசியாவின் கொற்றுகினபாலோ, 2016இல் ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ, 2020இல் இங்கிலாந்தின் வேல்ஸ், 2022இல் நேபாளத்தில் ஐலன்பீக், லெபட்ரே, மனசிலு போன்ற மலைகளில் ஏறி பயிற்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவேந்திய ஈழத் தமிழர் | Eelam Dushyanthan Mullivaikal On Mount Everest

அதேவேளை தனது இனத்தின் மீதான பற்றும், நாட்டின் மீதான பற்றுமே தன்னை சிகரம் தொடுமளவு சாதிக்க வைத்ததாக கூறும் இவர், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் சாதிக்க வேண்டும் என  விவேகானந்தன் துஷியந்தன் உறுதிபட தெரிவிக்கிறார்.