வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரின் மகன், மகனின் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவி சடலங்கள்
குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம் காலை 39 வயதுடைய கணவனும், 37 வயதுடைய மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் படுக்கை அறையில் வாயால் வாந்தி எடுத்த நிலையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர். அந்த அறையில் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கிருமி நாசினிப் வெற்றுப் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இருவரும் கிருமி நாசினியைக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூக்கில் தொங்கிய தந்தை
இவ்வாறிருக்கையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் தந்தையான ஓய்வுபெற்ற ஆசிரியர் (வயது 65) நேற்று மாலை அதே வீட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகன் மற்றும் மருமகள் இறந்த துயரத்தால் அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரின் சடலமும் குருநாகல் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மூன்று சடலங்கள் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று கா இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இறந்த மூவர் மாத்திரமே வசித்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.