மதப்பதற்றம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துங்கள்; ஜனாதிபதியிடம் கோரிக்கை (Video)

0
183

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. எனவே அதனை உடனடியாக தடுத்துநிறுத்துமாறு ஆலயத்தின் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உப அலுவலகத்திற்கு இன்றைய தினம் (15.05.2023) விஜயம் செய்த அவர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது, 

எமது ஆலயவளாகத்தில் தொல்பொருட் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நில அளவை செய்யப்படவுள்ளதாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு

அந்தவகையில் எமது ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்பொருள் சின்னம் அமைந்துள்ள நிலப்பரப்பினை தொல்லைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2023.05.18ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டுக்கு நாம் எமது முழுமையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறோம்.

ஏற்கனவே கடந்த 2021.03.22ஆம் திகதி அளவீட்டுப்பணிகளை மேற்கொள்வதற்காக வருகைதந்த தொல்பொருளியல் திணைக்களத்தினர், மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலய வளாகத்தினுள் உள்நுழையமுடியாதவாறு வெளியேற்றப்பட்டிருந்ததையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இன, மத வேறுபாடுகளற்று தொல்பொருள் சின்னங்களையும் அவற்றின் தொன்மையையும் பாதுகாக்க வேண்டிய தொல்பொருளியல் திணைக்களம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இனத்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருவதாலும், அத்திணைக்களத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகளாலும், அதனை எதிர்க்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஆலய சூழலில் மதப்பதற்றம் 

இலங்கையில் சதுர ஆவுடையார் கொண்ட சிவலிங்கத்தை உடைய ஒரேயொரு சிவாலயம் என்னும் பெருமையையும், 2,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையையும் கொண்டது எமது ஆலயம்.

அதன் பூசை மரபுகளும், வழிபாடுகளும் மிக இயல்பாக நடைபெற்று வரும் சூழலில், தொல்பொருளியல் திணைக்களத்தின் தலையீட்டினால் எமது மண்ணிலோ, இயல்பான இயங்கு நிலையிலுள்ள எமது ஆலயச் சூழலிலோ மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாமோ எமது மாவட்ட மக்களோ விரும்பவில்லை.

 தொல்பொருளியல் திணைக்களம்

எனவே, இவ்விடயத்தில் உயரிய கரிசனைகொண்டு, தொல்பொருளியல் திணைக்களத்தின் இத்தகையை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதாக வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023.05.11ஆம் திகதி தாங்கள் வழங்கிய உறுதிமொழியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

Sri Lanka,

அதற்கமைய எமது ஆலயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளையும் அதனோடு தொடர்புடைய அகழ்வுப் பணிகளையும் தங்களின் நேரடித் தலையீட்டினால் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தி, எமது இருப்பையும் இயங்கு நிலையையும், ஆலயத்தின் புனிதத்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.