ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர்.
அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. அந்நாட்டில் செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஈரான் அரசு இந்தாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தூக்கிலிடப்பட்ட 42 கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஈரானின் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் அலிரெசா அக்பரி, இங்கிலாந்து நாட்டிற்கு ஈரானின் அணுசக்தி இரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 582 கைதிகளை தூக்கிலிட்டதாக ஐ.எச்.ஆர் கூறுகிறது. அதேவேளை 2021ஆம் ஆண்டில் 333 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.