தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை படிப்படியாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைவதுடன், அடுத்த சில நாட்களில் சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பரப்பின் வானிலை
இன்றைய தினத்திற்கான (08.05.2023) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோ மீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலத் தளம்பல் நிலை சூறாவளியாகும் சாத்தியம்! அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் | Srilanka Forecast Today
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 – 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொந்தளிப்பாக காணப்படும் கடற்பரப்பு
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.