இந்தியாவில் 100 ஆண்டுகள் பழமையான நூலகம் தீ வைத்து எரிப்பு!

0
438

இந்தியாவின் பீகார் மாகாணத்தில் 113 ஆண்டுகள் பழமையான நூலகத்தை கலவரத்தில் ஈடுபட்ட குழு ஒன்று தீக்கிரையாக்கியுள்ளது.

பீகாரின் ஷரிஃப் நகரில் அமைந்துள்ள Madrassa Azizia என்ற கல்வி நிலையத்திற்கு சொந்தமான பழமையான நூலகத்தையே வன்முறையாளர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

தொடர்புடைய நூலகத்தில் பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அழகான கையெழுத்தால் எழுதப்பட்ட பண்டிதர்களால் கொண்டாடப்படும் இஸ்லாமிய நூல்கள் உட்பட 4,500 நூல்கள் இருந்துள்ளது.

மார்ச் 31ம் திகதி ராமர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊர்வலம் மேற்கொண்ட இந்துக்களில் சிலர் தொடர்புடைய கல்வி நிலையம் முன்பு ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் 113 ஆண்டுகள் பழமையான நூலகத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஷரிஃப் நகரின் பல்வேறு பகுதிகளில் அன்றைய தினம் நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவும் ஒன்று என்றே கூறுகின்றனர். தொடர்புடைய வன்முறை சம்பவங்களில் பலர் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் மற்றும் கடைகள் நொறுக்கப்பட்டன.

இந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக பலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறை குழு ஒன்று நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடியதுடன், நூல்களுக்கு தீயிட்டுள்ளனர்.

இதில் அந்த நூலகம் மொத்தமாக தீக்கிரையாகியுள்ளது. கையால் எழுதப்பட்ட 250 புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் பழங்கால தளபாடங்கள் உட்பட அனைத்தும் சாம்பலாக மிஞ்சியுள்ளது.

Madrassa Azizia கல்வி நிலையத்தில் சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 100 பேர்கள் கல்வி நிலையத்தின் சார்பில் இயங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

ரம்ஜான் பண்டிகை காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அந்த வளாகத்தில் இல்லை, இதனால் பெரும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர்.

2017ல் ஒருமுறை இதேப்போன்று வன்முறையாளர்களால் aந்த நூலகம் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கைகளால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், சுமார் ஓராண்டு காலம் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.