யாழில் மாமியாரால் 14 லட்சத்தை இழந்த மருத்துவர்

0
198

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் வைத்தியர் ஒருவர் வீட்டிலிருந்து 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்த ஆறு மணித்தியாலங்களில் சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் வைத்தியர் வீட்டில் இல்லாத போது இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பணம் மற்றும் நகைகள் காணாமை போனமை தொடர்பில் வைத்தியர் பொலிஸில் புதன்கிழமை (29) முறைப்பாடு செய்தார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வீட்டுக்குள் பிரவேசித்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவரிடம் பொலிசார் கேட்டபோது, மாமியார் கதவை மூட மறந்ததால் கதவு திறந்து கிடந்ததாக கூறியுள்ளார்.

திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்த திருடன், அறையிலிருந்த அலமாரியில் இருந்த 1.1 மில்லியன் ரூபா பணத்தையும், 300,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையிடப்பட்ட அனைத்து தங்க நகைகளும், 830,000 ரூபா பணமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.