சாரா என்னும் புலஸ்தினி மரணம்!வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

0
295

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (சாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக மரபணு பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரபணு பரிசோதனை

உயிரிழந்த 15 பேரின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்திய போது, கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியான அச்சி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா ஜாஸ்மின் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் தலைமறைவாகி தங்கியிருந்த வீட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் வகையில் குற்றவியல் விசாரணை நிபுணர்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புலஸ்தினி மகேந்திரனும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மாதிரி மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரி ஆகியன தாய்க்கும் மகளுக்கும் இடையில் உள்ள உயிரியல் ரீதியான தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கை 

புலஸ்தினி மகேந்திரனுக்கும் அவரது தாயாரான ராஜரத்னம் கவிதாவிற்கும் இடையிலான தொடர்பு 99.9999 சதவீதம் உறுதியாகியுள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Gallery