இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தோழியை காப்பாற்ற முயன்று 20 வயது கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒருதலை காதல்
உத்தர பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(23). இவர் கல்லூரி மாணவியான மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலை மோனிகா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் மோனிகாவை சந்தித்த ராகுல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சக மாணவர் சங்கர் வர்மா (20) மாணவி மோனிகாவுக்கு ஆதரவாக ராகுலை தடுத்துள்ளார்.
உயிரிழந்த நண்பர்
அவருடன் சண்டையிட்ட ராகுல், தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சங்கரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தலையில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ராகுலை தேடி வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.