இந்தாண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் தொடர்பில் அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை ‘மோர்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது.
உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’ அமெரிக்காவின் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடனும், சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் முன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ், பிரேசில் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து ஜனாதிபதி லியோ வரத்கர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் செஸ், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் சீனா, ரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் தொடர்பில் கருத்து கணிப்பு நடத்தவில்லை என்று ‘மோர்னிங் கன்சல்ட்’ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
