‘கன்னிக்கு பணத்தை கொடுங்கள் இல்லை என்றால் நீங்கள் அழிந்து விடுவீர்கள்’ வர்த்தகர்களை பயமுறுத்திய சிறிசுமண தேரர்…குற்றம் அம்பலம்

0
296

மிகப் பெரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் அறிவுரைக்கு அமைய பொரள்ளை சிறிசுமண தேரர், வர்த்தகர்கள் வீடுகளுக்கு சென்று அருள் வாக்கு கூறி, அவர்களை பயமுறுத்தி பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாமியாடி அருள் வாக்கு கூறி வர்த்தகர்களை பயமுறுத்திய சிறிசுமண தேரர்

வர்த்தகர்களின் வீடுகளுக்கு சென்றுள்ள சிறிசுமண தேரர், சாமியாடி அருள் வாக்கு கூறியுள்ளார்.“அந்த கன்னிக்கு பணத்தை கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் அழிந்து விடுவீர்கள்” எனக் கூறி பயமுறுத்தியுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்து கூறியுள்ளனர்.

அத்துடன் திலினி பிரியமாலியிடம் பெற்றுக்கொண்ட தங்கத்தை உருக்கி தயாரிக்கப்பட்ட தங்க கட்டிகளை காட்டி, இந்த தேரர், வர்த்தகர்களை முதலீடுகளுக்கு பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

திக்கோ நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி முறைப்பாட்டாளர்களின் 130 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்துள்ளதுடன் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.

பணம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பண மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, அவரது சட்டரீதியற்ற கணவர் எனக்கூறப்படும் இசுரு பண்டார, கிறிஸ் கூட்டு நிறுவனத்தின் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன,திக்கோ நிறுவனத்தின் பணிப்பாளரான கசுன் பெரேரா, பொரள்ளை சிறிசுமண தேரர் ஆகிய சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழிற்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலி சாமியாருக்கு பூஜைக்காக  77 லட்சம் ரூபாவை வழங்கிய ஜானகி சிறிவர்தன

Janaki Siriwardane-ஜானகி சிறிவர்தன

அதேவேளை சந்தேக நபரான இருசு பண்டார நான்கு கோடி ரூபாவை டொலர்களாக மாற்றியுள்ளதுடன் ஜானகி சிறிவர்தன சுமார் 8 கோடி ரூபா பணத்தை தவறாக செலவிட்டுள்ளார் எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜானகி சிறிவர்தன, காலி பிரதேசத்தை சேர்ந்த ரத்தரன் என்ற சாமியாருக்கு பணத்தை வழங்கியுள்ளதாக குரல் பதிவுகள் மூலம் தகவல் கிடைத்துள்ளதால், அந்த சாமியாரை அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டதாகவும் பூஜைகளுக்காக ஜானகி சிறிவர்தன 70 லட்சம் ரூபாவை வழங்கியதாக அவர் கூறினார் எனவும் திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் ஜானகி சிறிவர்தன, பொரள்ளை சிறிசுமண தேரரின் வங்கிக்கணக்கில் 22 லட்சம் ரூபாவை வைப்புச் செய்துள்ளார் எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை தமது தரப்பு வாதிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அனைத்து சந்தேக நபர்களும் சிறிய மற்றும் பெரியளவில் மோசடிகளுக்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர்களுக்கு பிணை வழங்கினால், அது விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்பதால், பிணை வழங்க முடியாது எனவும் நீதவான் கூறியுள்ளார்.