யானை வழித்தடங்கலில் குடியிருக்கும் மக்களை அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியேற்றவும் விவசாயத்திற்கு மாற்று பொருத்தமான இடங்களை கண்டறியுமாறும் வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத், அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வழித்தடங்கல் மீண்டும் யானைகளுக்கு

யானை வழித்தடங்கலை மீண்டும் காட்டு யானைகள் தமது இருப்பிடங்களை நோக்கி பயணிக்க கூடிய வகையில் ஒதுக்குவதன் மூலம், யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான சிக்கலை கட்டுப்படுத்த முடியும் எனவும் செயலாளர் கூறியுள்ளார்.
காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் கிராமங்களுக்குள் வருவதை குறைப்பது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில், அரசாங்க அதிபர்களுடன் சூம் தொழிற்நுட்பம் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
யானை வழித்தடங்கல் ஆக்கிரமிப்பு

காட்டு யானைகள் கடந்து செல்லும் வழித்தடங்கலை ஆக்கிரமித்து வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை அழித்து வருகிறன. அத்துடன் அடிக்கடி யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பொது மக்கள் இறப்பது மற்றும் யானைகள் பொறிகளில் சிக்கி கொல்லப்படும் நிலைமைகளும் காணப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.