63 ஸ்பூன்கள் சாப்பிட்ட குடிபோதைக்கு அடிமையானவர்!

0
257

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள போபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் பல நாட்களாக போதைக்கு அடிமையாகி இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் இவரை ஷாம்லியுலுள்ள ஓர் போதை மறுவாழ்வு மையத்தில் இவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

ஒரு மாத காலம் அங்கு இருந்த விஜய்யின் உடல்நிலை மிக மோசமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விஜய்யின் வயிற்றுக்குள் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இவரது வயிற்றில் 63 ஸ்பூன்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இளைஞனின் வயிற்றில் எப்படி இதனை ஸ்பூன்கள் வந்தது என்று குழம்பினர். பிறகு மருத்துவர்கள் அந்த இளைஞனிடம் கேட்க, ஒரு வருடமாக ஸ்பூன் சாப்பிட்டு வருகிறேன்’ என்று கூற அதிர்ச்சி அடைந்தனர். 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் வெற்றிகரமாக 63 ஸ்பூன்களை அகற்றிவிட்டனர். உடல்நிலை மோசமாக இருப்பதால் தீவிர கண்காணிப்பில் அந்த இளைஞன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் இதுகுறித்து பெற்றோர்கள் வேறொரு குற்றசாட்டை வைத்துள்ளனர். அதாவது, விஜய்க்கு மையத்தில் இருந்த ஊழியர்கள் வலுக்கட்டாயமாக ஸ்பூன் ஊட்டியதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.