யாழில் சண்டையில் நடந்து முடிந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!

0
111
தியாக தீபம் திலீபனின் 35 வது ஆண்டின் இறுதி நாள் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாட்டாமைத்தனத்தால் பெரும் குடுமிப்பிடி சண்டையில் நடந்து முடிந்தது. தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தூபியில் இடம்பெற்றது.
நினைவேந்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நினைவிடத்தை சுற்றி வளைத்து மஞ்சள் ரீசேர்ட் அணிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவேந்தலை செய்வதற்கு தயாராகி நின்றனர்.
தியாக தீபம் திலீபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினை பொதுச்சுடர் ஏற்றுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முயற்சித்த நிலையில், நல்லூரில் உள்ள நினைவிடத்தில் தியாக தீபம் தீலீபனுக்காக இரண்டு இளைஞர்கள் பறவைக் காவடி எடுத்தது வந்ததுடன், அவர்களை பொதுச்சுடர் ஏற்றவிடுமாறு சில முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்தனர். முன்னாள் போராளிகளுடன் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாங்களே பொதுச்சுடர் ஏற்றுவோம் என மல்லுக்கட்டி பொதுச்சுடரை ஏற்றினர்.
அதன் பிறகாவது பறவைக் காவடி எடுத்தவரை நினைவிடத்திற்குள் அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகளால் கோரப்பட்டபோதும் அதற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்பு தெரிவிக்கவே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் பொதுச்சுடரும் தட்டிவீழ்த்தப்பட்டது. பெரும் இழுபறிக்கு மத்தியில் காவடி எடுத்து வந்த இளைஞர்கள் காவடியை இறக்கி தியாக தீபம் திலீபனுக்கு மலர் தூவி அஞ்சலித்ததுடன் நினைவேந்தல் பெரும் குழப்பத்துக்கு மத்தியில் நடந்து முடிந்தது.
தியாக தீபம் திலீபனுக்கு பலரும் நினைவேந்தல் செய்வதற்கு முற்பட்டபோதும் அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அவர்கள் மீது வசை பாடியதையும் அவதானிக்க முடிந்தது.
இவ்வளவு குழப்பங்கள் இடம்பெற்று கொண்டிருந்த போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைகட்டி நடப்பவற்றை வேடிக்கை பார்த்ததை அவதானிக்க முடிந்தது.
இந்த ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இலங்கை அரசு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாத போதும், தமிழ் கட்சிகளும் தமிழ் தரப்புகளுமே நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தியமை அங்கிருப்பவர்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தை உருவாக்கியது.