யாழ் பருத்தித்துறையில் நீதி கோரி குடும்பத்தினரோடு வர்த்தகர் கவனயீர்ப்பு போராட்டம்

0
108

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப்போராட்டம் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது, 

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

“தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கட்டிடம் ஒன்றினை அமைத்து வருவதாக கடந்த வருடத்திலிருந்து அதாவது அயல் வீட்டுக்காரர் கட்டிடம் கட்டுவதற்கு ஆரம்பித்த வேளையே பருத்தித்துறை நகர சபைக்கு முறையிட்டதாக தெரிவித்துள்ளார். 

பருத்தித்துறை நகரசபை 

இந்நிலையில், அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் நகரசபையால் எடுக்கப்படாத நிலையில் தாம் மீண்டும் மீண்டும் பல முறைப்பாட்டை செய்ததாகவும் ஆனால் நகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இன்று குடும்பத்தினரோடு தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தான் ஒரு பருத்தித்துறை நகர் பகுதியில் வணிக நிலையம் ஒன்றினை நடத்தி வருவதாகவும் குறித்த பிணக்கு காரணமாக அண்மையில் இரவு வேளை தனது வணிக நிலையத்தில் அடையாளந் தெரியாதவர்கள் தன்மீது மின்சாரம் தடைப்பட்ட வேளை மிக மோசமாக தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

நகரசபை தவிசாளர் கருத்து 

இவ்விடயம் தொடர்பில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசாவிடம் வினவியபோது, போராட்டத்தில் ஈடுபடும் நபரால் தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்க்கு அமைவாக தாம் தமது சட்டதிட்டங்களும்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த போராட்டத்தில் பருத்தித்துறை வீ.எம் வீதியை சேர்ந்தபாலகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.